உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லாதான் நம்பர் ஒன். டெஸ்லா கார்கள் வைத்திருப்பது – லம்போகினி, ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ் வைத்திருப்பதுபோல், மதிப்புக்குரிய விஷயமும்கூட! இதன் விலை 1 கோடியில் இருந்துதான் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட டெஸ்லா, இந்தியாவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்; அது இந்தியாவுக்கு வரவே வராது என்றெல்லாம் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
டெஸ்லா இந்தியாவுக்கு வந்தால், அதன் முதல் கார் – ‘டெஸ்லா மாடல் 3’ ஆகத்தான் இருக்கும் என்றும், புக்கிங்குகள் ஆரம்பித்து விட்டன என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்திருந்தது டெஸ்லா. அதை நம்பி சில ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்லா மாடல்–3 காரின் புக்கிங்கை, PayTm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா போன்ற சில தொழிலதிபர்கள் 1000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 75,000 ரூபாய்) கொடுத்து புக்கிங் செய்து காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது – ஆம், டெஸ்லா இந்தப் புத்தாண்டில் இந்தியாவில் உண்மையாகவே விற்பனைக்கு வருகிறது.